Search This Blog

Saturday, June 11, 2011

30. சண்டேஸ்வர நாயனார்


சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்ற என்னும் ஊர் ஒன்று உளது. இது முருகன் வழிபட்டதலமாகும். இவ்வூரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள் வேதமோதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்து அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார்.
பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.
மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தார் ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை வைத்துக் கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.
சற்றுத் தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களைத் துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார்.
சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார்.
சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்றுரிமையாக்கி “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.
எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலொகம் சென்றார்.

No comments:

Post a Comment

Translate